இந்தியா
மகாராஷ்டிரா மந்திரி ராஜேஷ் டோப்

கொரோனா அதிகரித்தாலும் முழு லாக்டவுன் கிடையாது - மகாராஷ்டிரா அரசு முடிவு

Published On 2022-01-05 20:45 GMT   |   Update On 2022-01-05 20:45 GMT
மக்கள் கூட்டம் காணப்படும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  8 பேர் இறந்துள்ளனர்.  மேலும் 5,331 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 87,505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 797 ஆக உள்ளது.  இதில் 330 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின்னர் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

செவ்வாய் கிழமை மாநிலம் முழுவதும்  16,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  90 சதவீதம் பேர்களுக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று காணப்பட்டது.  10 சதவீத அறிகுறி உள்ள நோயாளிகளில், ஒன்று முதல் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரவல் அதிகரித்தாலும் நூறு சதவீத முழு அடைப்பு தேவையில்லை. அத்தியாவசியமற்ற பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.  மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். ஆனால் அது உடனடியாக கொண்டு வரப்பட வேண்டியதில்லை. இவ்வாறு மகாராஷ்டிரா மந்திரி தெரிவித்தார்.

இதனிடையே,  மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்படும் என்றும், ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்  நாக்பூர் நகரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News