இந்தியா
ஆர்யன் கான்

ஆர்யன் கான் வெள்ளிக்கிழமைதோறும் ஆஜராக தேவையில்லை... நிபந்தனையை தளர்த்தியது நீதிமன்றம்

Published On 2021-12-15 11:21 GMT   |   Update On 2021-12-15 12:27 GMT
ஆர்யன் கான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும, சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
மும்பை:

மும்பை கடற்கரையில், சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்தில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு (என்சிபி) அதிகாரிகளால் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். 

என்.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. குறிப்பாக, ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆர்யன் கான் ஆஜராகினார்.

இந்நிலையில் என்சிபி-யின் டெல்லி அலுவலகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருவதால், வெள்ளிக்கிழமை தோறும் மும்பை என்சிபி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி, ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். 



அவரது மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது இந்த வழக்கிற்கும் என்சிபியின் மும்பை அலுவலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் மும்பை அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்ற  நிபந்தனையை தளர்த்தும்படி கேட்டுக்கொண்டார். ஆர்யன் கான் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

என்சிபி தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் டெல்லி அல்லது மும்பை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி  நீதிபதி உத்தரவிட்டார். ஆர்யன் கான் இந்த வழக்கு தொடர்பாக டெல்லிக்கு பயணம் செய்தால் அவர் தனது பயணத் திட்டத்தை மும்பை என்சிபி-யிடம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மும்பைக்கு வெளியே வேறு காரணத்திற்காக பயணம் செய்தால் அவர் தனது பயணத்திட்டத்தை என்சிபி-க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதி புதிய நிபந்தனை விதித்தார்.
Tags:    

Similar News