செய்திகள்
பிரதமர் மோடி

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டார்

Published On 2021-10-28 19:19 GMT   |   Update On 2021-10-28 19:19 GMT
பிரதமர் மோடி இத்தாலியில் ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார்.
புதுடெல்லி:

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டார்.

அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16-வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

அதன்பின், பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார்.  கிளாஸ்கோவில் நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 1 - 2 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். 

Tags:    

Similar News