செய்திகள்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா

2019ம் ஆண்டில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அமித்ஷா அஞ்சலி

Published On 2021-10-26 06:08 GMT   |   Update On 2021-10-26 06:08 GMT
2019ம் ஆண்டில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு அமித்ஷா இன்று அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகர்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் நான்காவது நாளான இன்று புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் நினைவாக கடந்த ஆண்டு கட்டப்பட்ட நினைவிடத்தில் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  பின்பு, தியாகிகளின் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமித் ஷா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடுகையில், " கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணிச்சலான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு, புல்வாமா தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பிற்காக நீங்கள் செய்த உன்னத தியாகம், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரோடு பிடுங்குவதற்கான எங்கள் தீர்மானத்தை வலிமையாக்குகிறது. துணிச்சலான தியாகிகளுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Tags:    

Similar News