செய்திகள்
மண்டை ஓடுகள் சிக்கிய வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

பாழடைந்த கட்டிடத்தில் புதைத்து வைக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள்- போலீசார் மீட்டு விசாரணை

Published On 2021-09-20 08:39 GMT   |   Update On 2021-09-20 08:39 GMT
பழைய கட்டிடத்தில் மனித எலும்பு கூடுகள் இருந்ததால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கல்லுப்பாலம் என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றும் தொழிலாளர்கள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் அடிப்பகுதியில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் கவர் ஒன்று சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

இதை திறந்து பார்த்தபோது உள்ளே மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இது குறித்து ஆலப்புழா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து அங்கு சுற்றி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவரை திறந்து பார்த்தனர். அதில் 2 மனித மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள், விலா எலும்புகள் இருந்தன.

இதுகுறித்து தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எலும்பு கூடுகளை கைப்பற்றி ஆலப்புழா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழைய கட்டிடத்தில் மனித எலும்பு கூடுகள் இருந்ததால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News