செய்திகள்
கோப்புபடம்

மும்பைக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்

Published On 2021-09-19 02:13 GMT   |   Update On 2021-09-19 02:13 GMT
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மும்பைக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மும்பை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் 10 நாள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. திருவிழா கொண்டாட்டங்களுக்காக மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்தவர்கள் அடுத்த சில நாட்களில் மும்பை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருவிழா நிகழ்ச்சிகளால் மும்பையில் கொரோனா பரவிவிடக்கூடாது என்பதில் மாநகராட்சி கவனமாக உள்ளது.

இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் மும்பை திரும்பும்போது கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மும்பை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி நேற்று கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து அடுத்த 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். விநாயகர் சதுர்த்தி முடிந்து மும்பை திரும்புபவர்கள் இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்துகொள்ள 266 மையங்களை மும்பை மாநகராட்சி அமைத்துள்ளது. இதை ஊர் திரும்புபவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மேயர் கிஷோரி பனட்னேகர் கூறுகையில், “மக்கள் தங்கள் சொந்த ஊரில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்காக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும்“ என்றார்.

Tags:    

Similar News