செய்திகள்
டிரோன்

கொச்சி கடற்படை தளத்தில் டிரோன் பறந்ததால் பரபரப்பு

Published On 2021-07-30 22:06 GMT   |   Update On 2021-07-30 22:06 GMT
காஷ்மீரின் ஜம்மு விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 2 மர்ம டிரோன்கள் பறந்து வந்து தாக்குதல் நடத்தின.
கொச்சி:

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ளது. அதே பகுதியில் பழைய தொப்பம்பாடி பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு மேலே கடந்த 26-ம் தேதி ஒரு டிரோன் பறந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி சிவில், தனியார், ராணுவ விமான நிலையங்களின் 3 கி.மீ. சுற்றளவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராணுவ அமைப்புகள், தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் முன் அனுமதியின்றி 3 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன்கள் பறக்க தடை உள்ளது.

எனவே கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ளதால், அங்கு எந்த வித அனுமதியும் இன்றி இந்த டிரோனை பறக்க விட்டது குற்றமாகும்.

இந்த டிரோனை கடற்படையினர் கைப்பற்றி போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இந்த டிரோனை பறக்க விட்டவர் கொச்சியின் வடுதலா பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர் என தெரிய வந்தது. அவர் சுற்றுலா தொடர்பான தனது வலைத்தளத்தில் பதிவிடவும், யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யவும்தான் இந்த டிரோனை பறக்க விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோனை பறக்க விட எந்தவித முன்அனுமதியும் பெறவில்லை.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த டிரோனை பறக்க விட்ட நபர் அதை மற்றொரு நபரிடம் இருந்து ஓ.எல்.எக்ஸ். தளம் வழியாக ரூ.1 லட்சத்துக்கு பெற்றதாக கூறினார். எனவே இதற்காக அவரால் எந்தவொரு பில்லையும் தர முடியவில்லை” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக டிரோனை பறக்க விட்ட நபர் மீது போலீசார் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவுகள் 151 மற்றும் 102-ன்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Tags:    

Similar News