செய்திகள்
மத்திய மந்திரிசபை கூட்டம் (கோப்பு படம்)

இன்று மாலை மந்திரிசபை விரிவாக்கம்- பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அதிக பதவி கிடைக்க வாய்ப்பு

Published On 2021-07-07 10:05 GMT   |   Update On 2021-07-07 10:33 GMT
இளைஞர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் பல இளைஞர்களுக்கு மந்திரிசபையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றதற்கு பிறகு மந்திரி சபையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்போது முதன்முதலாக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

மத்திய மந்திரி சபையில் 81 பேரை மந்திரிகளாக நியமிக்க முடியும். தற்போது 53 மந்திரிகள் மட்டுமே உள்ளனர். எனவே 28 மந்திரிகளை நியமிக்கலாம். ஆனால் இன்றைய மாற்றத்தின் போது 24 பேர் வரை மந்திரிகளாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரசில் இருந்து பா.ஜனதாவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதல்- மந்திரி சோனாவால், மூத்த தலைவர்கள் சுசில்குமார் மோடி, நாராயண ரானே மற்றும் வருண்காந்தி, ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ஆர்.சி.பி.சிங், லோக் ஜனசக்தியை சேர்ந்த பசுபதி குமார் பராஸ், அப்னா தளத்தை சேர்ந்த அனு பிரியா பட்டேல் உள்ளிட்டோர் மந்திரி ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



எல்லா சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு கூடுதலாக மந்திரி பதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதிக பெண்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது. மேலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் பல இளைஞர்களுக்கும் பதவி கொடுக்க இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கோவா, மணிப்பூர், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

அதிலும் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.

இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் மந்திரிசபையில் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் மேற்கு வங்காளத்தில் கட்சிக்காக உழைத்த பலருக்கும் மந்திரி பதவி வழங்கப்படலாம்.

கூட்டுறவு நிறுவன செயல்பாடுகளை மேலும் வலுவாக்கும் வகையில் கூட்டுறவுக்கென்று தனித் துறை உருவாக்கப்பட இருக்கிறது. அந்த துறைக்கும் தனி மந்திரி நியமிக்கப்பட உள்ளார். பல புது முகங்கள் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளத்துக்கு தேர்தல் முடிந்து மந்திரி சபை பதவி ஏற்கும் போதே மத்திய மந்திரி பதவி வழங்க பிரதமர் மோடி முன் வந்தார். ஆனால் ஒரே ஒரு பதவி வழங்குவதாக இருந்தது.

நிதிஷ்குமார் 2 பதவி கேட்டார். அதை தர மறுத்ததால் அப்போது அந்த கட்சிக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இப்போது 2 மந்திரி பதவி வழங்க மோடி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் நிதிஷ்குமார் 4 பதவிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே ஐக்கிய ஜனதாதளம் மந்திரி பதவியை ஏற்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News