செய்திகள்
கோப்புப்படம்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்காததால் டுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பு வாபஸ்

Published On 2021-06-16 20:48 GMT   |   Update On 2021-06-16 20:48 GMT
‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் டுவிட்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, இந்தியாவில் அதிக பயனாளர்களுடன் செயல்படும் சமூக வலைத்தளங்கள், தங்கள் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் மீது ‘போலி’ என 36 மணி நேரத்தில் முத்திரை குத்த வேண்டும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதை நீக்க வேண்டும்.

மேலும், பயனாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்தியாவில் வசிக்கும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி, ஒரு தொடர்பு அதிகாரி, ஒரு தலைமை பொறுப்பு அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள மே 25-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மே 26-ந் தேதி முதல் இவை அமலுக்கு வந்தன.

இந்த விதிமுறைகளை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால், ‘டுவிட்டர்’ நிறுவனம் ஏற்காமல் முரண்டு பிடித்தது. கடந்த 5-ந் தேதி டுவிட்டருக்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.

அதற்கு டுவிட்டர் நிறுவனம் கூடுதல் கால அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசமும், கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், புதிய விதிமுறைகளை டுவிட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும், புதிய விதிமுறைப்படி, டுவிட்டர் நியமித்த குறைதீர்ப்பு அதிகாரியும், தொடர்பு அதிகாரியும் இந்தியாவில் வசிப்பவர்கள் அல்ல. தலைமை பொறுப்பு அதிகாரி நியமனம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

அத்துடன், புதிய விதிமுறைகளுக்கும் உடன்படாததால், டுவிட்டர் இதுவரை அனுபவித்து வந்த சட்ட பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதனால், இடைநிலை தளம் என்ற அந்தஸ்தையும் ‘டுவிட்டர்’ இழந்தது. இனிமேல், டுவிட்டரில் பயனாளர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அவர்களுடன் டுவிட்டர் நிறுவனமும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் ஒரு முஸ்லிம் நபரின் தாடியை அகற்றி, அவரை ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறச்சொல்லி ஒரு கும்பல் தாக்குவதுபோல் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியானது. அது போலியான வீடியோ என்று சொல்லி, அதை அகற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால், டுவிட்டர் அகற்றவில்லை. தற்போது, சட்ட பாதுகாப்பை இழந்ததால், ‘டுவிட்டர்’ நிறுவனம் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோவை வெளியிட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:-



புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள டுவிட்டருக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், அந்நிறுவனம் ஒத்துழைக்கவில்லை. கருத்து சுதந்திரத்துக்காக கொடி பிடிப்பதாக சொல்லும் டுவிட்டர், இந்த விதிமுறைகள் விஷயத்தில் திட்டமிட்டே ஒத்துழையாமை பாதையில் செல்கிறது.

பொய் செய்திகள் விஷயத்தில், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாட்டுடன் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News