செய்திகள்
ஈசுவரப்பா

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: ஈசுவரப்பா

Published On 2021-05-29 04:06 GMT   |   Update On 2021-05-29 04:06 GMT
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள், எக்காரணம் கொண்டும் தற்போது ஆட்சி தலைமையை மாற்றுவது இல்லை என்ற முடிவில் தெளிவாக உள்ளனர்.
பெங்களூரு :

கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக புகார் கடிதம் கொடுத்தார். தனது துறையில் முதல்-மந்திரி எடியூரப்பா தலையிடுவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈசுவரப்பாவின் புகார் எதிரொலியாக எடியூரப்பா மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன் பிறகு அந்த விவகாரம் அப்படியே அமைதியாகிவிட்டது.

இந்த நிலையில் எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மந்திரிகள் சிலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள், எக்காரணம் கொண்டும் தற்போது ஆட்சி தலைமையை மாற்றுவது இல்லை என்ற முடிவில் தெளிவாக உள்ளனர். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், பாறையை போல் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறோம். எடியூரப்பாவை மாற்றுவது குறித்து சிலர் ஆலோசனை நடத்துவதாக மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். அவருக்கு கிடைத்த தகவலை அவர் கூறி இருப்பார். ஆனால் எங்கள் கட்சி மேலிட தலைவர்களின் முடிவே இறுதியானது.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
Tags:    

Similar News