செய்திகள்
கோப்புப்படம்

பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று தொடக்கம்

Published On 2021-05-12 01:19 GMT   |   Update On 2021-05-12 01:19 GMT
பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.
பெங்களூரு:

பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று முதல் (புதன்கிழமை) தொடங்கப்படுவதாக கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் அரசு-தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை, ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆக்சிஜன் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த பஸ்சில் ஆக்சிஜன் வழங்கப்படும். மருத்துவமனையில் படுக்கை கிடைத்ததும் அவர் அங்கு மாற்றப்படுவார். நோயாளிகளின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் வசதி கொண்ட பஸ் விக்டோரியா அல்லது கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும். தற்போதைக்கு சோதனை அடிப்படையில் ஒரு பஸ்சில் மட்டும் இந்த வசதியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தால், ஆக்சிஜன் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த பஸ்சில் சானிடைசர் திரவம், முகக்கவசம் போன்றவையும் வைக்கப்படும். இந்த ஆக்சிஜன் பஸ் நாளை (அதாவது இன்று) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது” என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News