செய்திகள்
திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்

தடையை மீறி வெற்றிக் கொண்டாட்டம்... தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2021-05-02 09:38 GMT   |   Update On 2021-05-02 09:38 GMT
திமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்றதால், கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பு தொண்டர்கள் திரண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக மட்டும் மெஜாரிட்டிக்கு தேவையான 118 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வெற்றியை நெருங்கியதால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பு தொண்டர்கள் திரண்டு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பட்டாசுகளையும் வெடித்தனர்.

இதேபோல் மேற்கு வங்காளத்திலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. இதனால் அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தடை உத்தரவை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பி உள்ளது. அதில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களக்கு உடனடியாக தடை விதிக்கும்படி கூறி உள்ளது. மேலும், வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்த பகுதிகளில் அவற்றை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 
Tags:    

Similar News