செய்திகள்
முதல் மந்திரி மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் எதிரொலி - நந்திகிராம் தொகுதி பாதுகாப்பு அதிகாரி இடைநீக்கம்

Published On 2021-03-14 20:38 GMT   |   Update On 2021-03-14 20:38 GMT
மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 10-ம் தேதி அந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை தாக்கியதில் காயமடைந்தார். இதற்காக கொல்கத்தா ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை பெற்று தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நந்திகிராம் தொகுதியில் முதல்-மந்திரிக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மூத்த போலீஸ் அதிகாரி விவேக் சகாயை தேர்தல் கமிஷன் நேற்று இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும், இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கும் முதல்-மந்திரியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தவறியதற்காக அவர்மீது ஒரு வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நந்திகிராம் தொகுதி அடங்கியிருக்கும் புர்பா மேதினிபூர் மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்தும், போலீஸ் சூப்பிரண்டை இடைநீக்கம் செய்தும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News