செய்திகள்
கோப்புப்படம்

உத்தரகாண்ட் பேரிடர் - 40 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பே காரணம்

Published On 2021-03-06 23:51 GMT   |   Update On 2021-03-06 23:51 GMT
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டேராடூன்:

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த 2 நீர்மின் நிலையங்கள் இதில் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த கோர சம்பவத்தில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 132 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. இந்த நிலையில் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை கனமழை பெய்தது மற்றும் உத்தரகாண்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகரித்தது ஆகியவையே பனிப்பாறைகள் உடைந்து விழுவதற்கு காரணம் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ஐ.சி.ஐ.எம்.ஓ.டி) என்கிற அமைப்பு உத்தரகாண்ட் பேரிடர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பனிப்பொழிவு இல்லாதது மற்றும் சூரிய கதிர் வீச்சின் வெளிப்பாடு அதிகரித்தது ஆகியவற்றின் விளைவாக பனிப்பாறைகளின் ஸ்திரத்தன்மை குறைந்து பாறைகள் உடைந்திருக்கக்கூடும். அத்துடன் பிப்ரவரி 4 முதல் 6 வரையிலான கடுமையான மழை பொழிவும் இந்த பேரிடர் நிகழ்வதற்கு சாதகமாக இருந்திருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News