செய்திகள்
கால்வாயில் கவிழ்ந்த பேருந்து

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு- டிரைவர் கைது

Published On 2021-02-17 09:09 GMT   |   Update On 2021-02-17 09:09 GMT
மத்திய பிரதேசத்தில் கால்வாய்க்குள் பேருந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்ற பேருந்து காவாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் கிராம மக்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் கால்வாயில் நீந்தியபடி கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டனர்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. நேற்று மாலை வரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேருந்தின் டிரைவரை கைது செய்தனர். சாத்னாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சிதி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் மொத்தம் எத்தனை நபர்கள் பயணம் செய்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. 60க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News