செய்திகள்
கோப்புப்படம்

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு - ரூ.200 முதல் ரூ.5,600 வரை அதிகரித்தது

Published On 2021-02-12 00:23 GMT   |   Update On 2021-02-12 00:23 GMT
விமான கட்டணங்களை 30 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ரூ.200 முதல் ரூ.5,600 வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல், விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. மே 25-ந் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே இயக்கிய விமானங்களில் 33 சதவீதம்வரை மட்டுமே இயக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், விமான பயணத்தின் நேரம் அடிப்படையில், 7 பிரிவுகளாக பிரித்து, அவற்றுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச கட்டணமும், அதிகபட்ச கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உயர்த்தியது. 10 சதவீதம் முதல் 30 சதவீதம்வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் கட்டண உயர்வு, மார்ச் 31-ந் தேதி வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று கூறியுள்ளது.

அதன்படி, 40 நிமிடத்துக்கு குறைவான பயணத்துக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்து 200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.9 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆயிரத்து 300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.11 ஆயிரத்து 700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆயிரத்து 900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.13 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.16 ஆயிரத்து 900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6 ஆயிரத்து 100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.24 ஆயிரத்து 200 ஆக, அதாவது ரூ.5,600 அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3-ந் தேதியில் இருந்து, 80 சதவீத விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி, மார்ச் 31-ந் தேதிவரை நீடிக்கும் என்றும் நேற்று தெரிவித்தது.
Tags:    

Similar News