செய்திகள்
கோப்புப்படம்

டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலா? - இஸ்ரேல் தூதர் பரபரப்பு பேட்டி

Published On 2021-01-30 22:58 GMT   |   Update On 2021-01-30 22:58 GMT
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து இஸ்ரேல் தூதர் பரபரப்பு பேட்டி அளித்தார்.
புதுடெல்லி:

டெல்லியில் நேற்று முன்தினம் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடந்தது. இதில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படாதபோதும், இது தலைநகரை அதிர வைத்துள்ளது.

இதையொட்டி, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இது பயங்கரவாத தாக்குதல் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. ஆனால் உளவுத்துறையினர் தகவல்களை அடுத்து கடந்த சில வாரங்களாகவே நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருந்ததால் இந்த குண்டு வெடிப்பு ஆச்சரியம் அளிக்கவில்லை.

மேற்காசிய பிராந்தியத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்களின் இந்த தாக்குதல்கள் எங்களை தடுக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. எங்கள் அமைதி முயற்சிகள் தடையின்றி தொடரும்.

சம்பவம் இந்திய மண்ணில் நடந்துள்ளதால் விசாரணை பெரும்பாலும் இந்திய அதிகாரிகளால் நடத்தப்படும். ஆனாலும் என்ன உதவி தேவை என்றாலும், அதை நாங்கள் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடைத்த, இஸ்ரேல் தூதரக முகவரியுடன் கூடிய உறையில் இருந்த தாளில், இந்த குண்டுவெடிப்பை ஈரானில் நடந்த குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News