செய்திகள்
துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தபடம். அருகில் எடியூரப்பா உள்ளார்.

எடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: கோவிந்த் கார்ஜோள்

Published On 2021-01-06 02:11 GMT   |   Update On 2021-01-06 02:11 GMT
யத்னால், உமேஷ் கட்டியை தவிர்த்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்களிடம், முதல்-மந்திரி எடியூரப்பா கருத்துக்களை கேட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி அளித்துள்ளார். எடியூரப்பாவுக்கு ஆதரவாக பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

எடியூரப்பாவே தங்களது முதல்-மந்திரி என்று 118 எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். அவரது தலைமை தான் வேண்டும் என்று 118 எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஆனால் பசனகவுடா பட்டீல் யத்னால், உமேஷ் கட்டி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் தான் எடியூரப்பாவின் தலைமையை ஏற்காமல் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் மந்திரிகள் மற்றும் எடியூரப்பாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு பல்வேறு சவால்களை எடியூரப்பா எதிர் கொண்டுள்ளார். மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நிதி நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக கர்நாடகம் விளங்குகிறது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வலியுறுத்தி உள்ளனர். வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையாகும். அரசின் நிதி நிலையை கவனத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்க எடியூரப்பாவும் சம்மதித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News