செய்திகள்
கைது

சைப்ரஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதி டெல்லியில் கைது

Published On 2020-12-23 23:34 GMT   |   Update On 2020-12-23 23:34 GMT
சைப்ரஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதியை டெல்லி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்தனர்.
புதுடெல்லி:

சீக்கியர்களின் தனிமாநில கோரிக்கையான காலிஸ்தான் போராட்டத்திற்காக சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவர் குர்ஜீத் சிங் நிஜ்ஜார். இவர் மீது மகாரா‌‌ஷ்டிரா போலீசார், கடந்த ஆண்டு ஜனவரியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவருடன் சேர்ந்து ஹர்பால்சிங் மற்றும் மோயின் கான் ஆகியோரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் சமூக வலைத்தளங்களில், பிரிவினையைத் தூண்டும் வீடியோக்கள், படங்களை வெளியிட்டிருந்தனர். முன்னாள் பஞ்சாப் முதல்-மந்திரி பீந்த் சிங் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஜக்தார் சிங்கை புகழும் விதமாகவும் கருத்து வெளியிட்டிருந்தனர். நிஜ்ஜார் வழிகாட்டுதல்படி மோயின் கான் ஒரு துப்பாக்கியை வாங்கியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) இவர்கள் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அப்போது நிஜ்ஜார் பஞ்சாபில் இருந்து தலைமறைவாகி சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார்.

சமீபத்தில் சைப்ரஸில் கைது செய்யப்பட்ட நிஜ்ஜார் செவ்வாய்க்கிழமை நாடுகடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார்.

அவரை டெல்லி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்தனர். அவர் மேற்படி விசாரணைக்காக மும்பைக்கு கொண்டு வரப்படுகிறார்.
Tags:    

Similar News