செய்திகள்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு - கோப்புப்படம்

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்துக்கு பிப்ரவரி 15-ந் தேதி கடைசி நாள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கெடு

Published On 2020-12-17 02:18 GMT   |   Update On 2020-12-17 02:18 GMT
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்துவதற்கு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

அரசின் பல்வேறு துறைகளில் மக்கள் மைய சீர்திருத்தங்களை மாநிலங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயலாக்கம், தொழில்களை எளிதாக செய்வதற்கான சீர்திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் ஆகும்.

இந்த சீர்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தினால் மாநிலங்களுக்கு 2 வகையான பலன்கள் கிடைக்கும். முதல்வகை பலனில், நிறைவு செய்யப்படும் ஒவ்வொரு சீர்திருத்தத்துக்கும் மொத்த மாநில உற்பத்தியில் 0.25 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் அனுமதிக்கப்படும். 4 சீர்திருத்தங்களையும் நிறைவு செய்தால் 2.14 லட்சம் கோடி வரை கூடுதல் கடன் பெறலாம். 2-வது வகை பலனில், மேற்கண்ட முக்கியமான 4 சீர்திருத்தங்களில் ஏதாவது 3 சீர்திருத்தங்களை நிறைவு செய்தால் மாநிலங்களுக்கான மூலதன செலவுக்கு நிதிஉதவி அளிக்கும் திட்டத்தில் கூடுதல் நிதிஉதவி அளிக்கப்படும்.

இந்த பலன்களை பெற மாநிலங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9 மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன. இதைப்போல தொழில் சீர்திருத்தங்களை 4 மாநிலங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை ஒரு மாநிலமும் நிறைவு செய்துள்ளன. இதற்காக இந்த மாநிலங்களுக்கு ரூ.40 ஆயிரத்து 251 கோடி கூடுதலாக கடன் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News