செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி பன்னாட்டு நேரடி முதலீடு: எடியூரப்பா தகவல்

Published On 2020-12-03 06:13 GMT   |   Update On 2020-12-03 06:13 GMT
ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் கர்நாடகம் ரூ.10 ஆயிரம் கோடி பன்னாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்ததாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

தொழில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளின் தூதர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு நாடுகளின் இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

“நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் கர்நாடகம் ரூ.10 ஆயிரம் கோடி பன்னாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதேபோல் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மொத்த தொழில் முதலீடுகளில் 50 சதவீதத்தை கர்நாடகம் ஈர்த்துள்ளது. அதாவது ரூ.1.10 லட்சம் கோடி முதலீடுகள் கர்நாடகத்திற்கு வந்துள்ளன.

கர்நாடகம் ரூ.2.50 லட்சம் கோடி பொருளாதார பலத்துடன் திகழ்கிறது. மேலும் கர்நாடகம் வலுவான நிலையில் வளர்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்த பன்னாட்டு நேரடி முதலீடுகளை கர்நாடகம் ஊக்குவிக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரம், விமானவியல், பாதுகாப்பு, மின்சாரம், உள்கட்டமைப்பு உற்பத்தித்துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கர்நாடக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள தொழில் கொள்கை, அனைத்து துறைகளுக்கும் சாதகமாக உள்ளது. மைசூரு, மங்களூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி போன்ற 2-ம் நிலை நகரங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. துமகூருவில் 10 ஆயிரம் ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. கர்நாடகம் நாட்டின் அறிவுசார் மாநிலங்களின் தலைநகராக திகழ்கிறது. புதுமைகளை கண்டுபிடிப்பதிலும் எங்கள் மாநிலம் முன்னணியில் இருக்கிறது.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, தொழில்துறை முதன்மை செயலாளர் கவுரவ்குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News