செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்- மம்தா பானர்ஜி 7-ந் தேதி பிரசாரம் தொடக்கம்

Published On 2020-11-30 08:11 GMT   |   Update On 2020-11-30 08:11 GMT
அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 294 தொகுதிகளிலும் பிரபலமானவர்களை களம் இறக்கி பிரசாரத்தில் ஈடுபட மம்தா வியூகம் வகுத்துள்ளார்.

கொல்கத்தா:


மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்துடன் அவரது 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெறுகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

இதற்கிடையே தேர்தலை எதிர்கொள்ள மேற்கு வங்க மாநில அரசியல் கட்சிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த முறை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் மம்தா பானர்ஜி 294 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க பட்டியல் தயாரித்து உள்ளார்.

விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரசாரத்தை தொடங்கவும் அவர் வியூகம் வகுத்து உள்ளார். இந்தநிலையில் வருகிற 7-ந் தேதி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மித்னாபூர் மாவட்டத்தில் அவர் பிரசாரத்தை தொடங்குவார் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின் போது எத்தகைய பிரசார யுக்திகளை கையாண்டாரோ அதேபோல இந்த முறையும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மம்தா திட்டமிட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கணிசமான வாக்குகளை பிரிக்கும் நிலையில் பா.ஜனதா வெற்றி பெறக்கூடாது என்பதில் மம்தா தீவிரமாக உள்ளார். எனவே தனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு விலை போய்விடக்கூடாது என்பதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

294 தொகுதிகளிலும் பிரபலமானவர்களை களம் இறக்கி பிரசாரத்தில் ஈடுபட மம்தா வியூகம் வகுத்துள்ளார்.

Tags:    

Similar News