செய்திகள்
என்கவுண்டர் நடந்த இடம்

நக்ரோட்டா என்கவுண்டர்... உள்துறை மந்திரி, உளவுத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை

Published On 2020-11-20 10:29 GMT   |   Update On 2020-11-20 10:29 GMT
ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
புதுடெல்லி:

ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினருக்கும், லாரியில் பதுங்கியபடி வந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், மும்பை தாக்குதல் போன்று மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், நக்ரோட்டா என்கவுண்டர் தொடர்பாக பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். உள்துறை மந்திரி அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா மற்றும் உளவுத்துறையின் உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

மும்பை தாக்குதலின் நினைவு நாளில் (நவம்பர் 26), பயங்கரவாதிகள் ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என்று ஜம்மு பிராந்திய ஐஜி கூறியிருந்தார். 

எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் நவம்பர் 28 முதல் டிசம்பர் 19 வரை எட்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெறும்.
Tags:    

Similar News