செய்திகள்
கோப்பு படம்

மும்பை: ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்

Published On 2020-10-11 10:42 GMT   |   Update On 2020-10-11 10:42 GMT
மும்பையில் ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டதாக மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. அப்போது மாநில முதல் மந்திரியாக இருந்த தேவேந்திரபட்னாவிஸ் ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்ட ஆதரவு அளித்தார்.   

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கு அப்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்த சிவசேனா ஆதரவு அளித்தது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையில், அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றது. ஆனால், அரசியல் காரணங்களால் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இந்த கூட்டணியின் தலைமையில் மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரியாக சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். முதல் மந்திரியாக பதவியேற்ற உடன் ஆரே பகுதியில் அமைக்கப்படவிருந்த மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிட பணிகளை உத்தரவ் தாக்கரே ரத்து செய்தார். 

மேலும், ஆரே பகுதியில் அமையவிருந்த வாகன நிறுத்துமிடம் கஞ்சூர் மர்க் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் நிலுவையிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெறுவதாக மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். மேலும், வாகன நிறுத்துமிடம் கஞ்சூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவதாக உத்தவ் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   
Tags:    

Similar News