செய்திகள்
உ.பி.யில் நடந்த போராட்டம்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - உ.பி. அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2020-10-01 16:55 GMT   |   Update On 2020-10-01 16:55 GMT
ஹத்ராஸ் பாலியல் சம்பவம் தொடர்பாக உ.பி. அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய அரங்கின் விருந்தினர் இல்லத்துக்கு அவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர் பிறகு அவர்களை விடுதலை செய்தனர். இதன் பின்னர் அவர்கள் இருவரும் டெல்லி சென்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அக்டோபர் 12-ம் தேதிக்குள் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விளக்கமளிக்க மாநில உள்துறை, காவல்துறை மற்றும் ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பெண்களைக் காக்கத் தவறி வருவதாக முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News