செய்திகள்
ஒட்டகம்

இந்தோ-சீன எல்லை ராணுவ ரோந்து பணியில் இரட்டை திமில் கொண்ட ஒட்டகம்

Published On 2020-09-21 16:24 GMT   |   Update On 2020-09-21 16:24 GMT
இந்தோ-சீன எல்லையில் ராணுவ ரோந்து பணிகளில் இரட்டை திமில் கொண்ட ஒட்டகங்களை பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.  இதன்பின்னர் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்தது. எனினும் படைகளை சீனா வாபஸ் பெறும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தோ-சீன எல்லையில் ராணுவ ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக, லே நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இரட்டை திமில் கொண்ட ஒட்டகங்களிடம் ஆய்வு மேற்கொண்டது.

இதுபற்றி அந்த அமைப்பின் விஞ்ஞானி சாரங்கி கூறும்பொழுது, ‘‘இந்த வகை ஒட்டகங்கள் கிழக்கு லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்திற்கு செல்ல கூடியது. 170 கிலோ எடையை சுமக்க வல்லது என ஆராய்ச்சியின் பயனாக தெரிய வந்துள்ளது.

அதனுடன் எடையை சுமந்து 12 கி.மீட்டர் தொலைவுக்கு ரோந்து பணியிலும் அவை ஈடுபட முடியும். ராஜஸ்தானில் உள்ள ஒற்றை திமில் ஒட்டகங்களுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஒட்டகங்கள் 3 நாள் வரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தாக்குப்பிடிக்க கூடிய தன்மை கொண்டது.

இந்த வகை ஒட்டகங்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் அவை ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்படும்’’ என அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News