செய்திகள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள் (கோப்புப் படம்)

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது

Published On 2020-08-23 15:57 GMT   |   Update On 2020-08-23 15:57 GMT
காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீர் பிரச்சினை மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மொகமூத் குரேஷி, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஆகியோர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதன்பின், இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், ‘காஷ்மீரின் தற்போதைய நிலவரம், தனது நிலைப்பாடு, கவலைகள் மற்றும் தற்போதைய அவசர பிரச்சினைகள் குறித்து சீனக்குழுவிடம் பாகிஸ்தான் எடுத்துரைத்தது. காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் வரலாறுகளில் இருந்தே தொடரும் பிரச்சினையாக கூறிய சீனா, இந்த பிரச்சினையை அமைதியாக தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் அங்கு நடைபெறும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் நிலைமையை சிக்கலாக்குவதால், அதை சீனா எதிர்க்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை இந்தியா நேற்று நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதியாகும். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குழுக்கள் தலையிடாமல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த காலங்களைப் போலவே காஷ்மீர் குறித்த பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்து இந்தியாவின் கவலையை இரு நாடுகளுக்கும் தொடர்ந்து தெரிவித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News