செய்திகள்
கிரிஷ் சந்திரா மர்மு

காஷ்மீர் கவர்னர் பதவியில் இருந்து கிரிஷ் சந்திரா மர்மு திடீர் ராஜினாமா?

Published On 2020-08-05 19:14 GMT   |   Update On 2020-08-05 19:14 GMT
காஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமணம் செய்யப்பட்டார்.

குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான மர்மு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப்பின் காஷ்மீருக்கு மத்திய அரசால் நியமணம் செய்யப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.

இந்நிலையில், 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் கவர்னராக செயல்பட்டுவந்த கிரிஷ் மர்மு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வரவு,செலவு கணக்குகளை சரிபார்க்கும் இந்திய அரசின் மிக முக்கிய பொறுப்பான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கு மர்மு செல்ல இருப்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத்தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் பதவியை வகிப்பவரை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான அதிகார உரிமையை இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் பெற்றுள்ளார்.

இந்த பதவிக்கு மர்மு நியமணம் செய்யப்படலாம் என்ற தகவல் பரவலாக வெளியாகிவந்த நிலையில் காஷ்மீர் கவர்னர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் கவர்னர் மர்மு பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக வெளியாகிவரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News