செய்திகள்
கவர்னர் கல்ராஜ்

இந்த முறை சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதிப்பார் என நம்புகிறோம் - ராஜஸ்தான் மந்திரி பேச்சு

Published On 2020-07-29 15:19 GMT   |   Update On 2020-07-29 15:19 GMT
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட இந்த முறை ஆளுநர் அனுமதியளிப்பார் என நம்புகிறோம் என மந்திரி பிரதாப் ஹசாரியாவாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

எனினும் தற்போது தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கெலாட் இறங்கினார்.

இதற்காக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை பல முறை சந்தித்த கெலாட் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், முதல்மந்திரியின் கோரிக்கையை கவர்னர் தொடர்ந்து நிராகரித்து வந்தார்.

சட்டசபையை கூட்ட அனுமதிக்கவில்லை என்றால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என கேலட் எச்சரிக்கை விடுத்தார். இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையும் முற்றுகையிடப்பட்டது.

இதற்கிடையில், தனிமனித இடைவெளியை பின்பற்றி சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி வழங்கினார். ஆனால் பேரவையை கூட்டுவதற்கு முன்பு உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் சிபி ஜோஷ் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அம்மாநில மந்திரி பிரதாப் ஹசாரியாவாஸ் கூறுகையில், சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டக் கோரி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு நாங்கள் மீண்டும் வரைவு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளோம். 

நாங்கள் அனுப்பிய வரைவு கோரிக்கையை இந்த முறை ஆளுநர் ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவையை கூட்ட விரைவில் தேதி அறிவிப்பார் என நம்புகிறோம்’ என்றார்.
Tags:    

Similar News