செய்திகள்
அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட கத்தி

கஞ்சா கிடைக்காத கோபத்தில் கத்தியை விழுங்கிய ஆசாமி... 3 மணி நேரம் போராடி அகற்றிய எய்ம்ஸ் டாக்டர்கள்

Published On 2020-07-28 05:37 GMT   |   Update On 2020-07-28 05:37 GMT
மனிதனின் வயிற்றில் சிக்கியிருந்த கத்தியை எய்ம்ஸ் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.
புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் போதைக்கு அடிமையான 28 வயது வாலிபர் ஒருவர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கஞ்சா கிடைக்காத கோபத்தில் சமையலறை கத்தியை விழுங்கி உள்ளார். சுமார் 20 செமீ நீளமுள்ள அந்த கத்தி வயிற்றுக்குள் சென்றபோதும் அவருக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில நாட்கள் கழித்து அவருக்கு அதிக பசி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த்போது வயிற்றுக்குள் கத்தி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகுதான் குடும்பத்தினருக்கும் இந்த விஷயம் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பித்த நாளத்திற்கு மிக அருகாமையில் கத்தி இருந்ததால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை எய்ம்ஸ் டாக்டர்கள் சுமார் 3 மணி நேரத்தில் செய்து முடித்து கத்தியை அகற்றினர். தொடர்ந்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஒரு நபர் முழு கத்தியை விழுங்கி உயிர் பிழைத்த முதல் சம்பவம் இது என எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர். இதுவரை ஊசி, முள் மற்றும் மீன் கொக்கி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை விழுங்கிய மூன்று முதல் நான்கு கேஸ்களை மட்டுமே பார்த்திருப்பதாக கூறுகின்றனர்.

Tags:    

Similar News