செய்திகள்
ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர்

ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Published On 2020-07-12 12:38 GMT   |   Update On 2020-07-12 12:38 GMT
கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண்ணை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரில் வைத்து நேற்று கைது செய்தனர். மேலும், ஸ்வப்னாவின் குடும்பத்தினரையும் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சந்தீப் நாயரையும் நேற்று இரவே கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரையும் கேரளாவுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகிய இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ,ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் முன்னர் இருவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

வைரஸ் பரிசோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளதால் இவர்களை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுக்க முடியாது எனவும், கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த உடன் நீதிமன்றத்தை மீண்டும் அணுகி விசாரணைக்கு அனுமதியை பெறலாம் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags:    

Similar News