செய்திகள்
சதானந்தகவுடா

இந்தியாவில் 3 இடங்களில் ரூ.3,000 கோடியில் மருந்து உற்பத்தி பூங்கா: மத்திய மந்திரி சதானந்தகவுடா

Published On 2020-07-11 03:49 GMT   |   Update On 2020-07-11 03:49 GMT
ரூ.3,000 கோடியில் இந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு :

மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பிரச்சினையை இந்த உலகமே எதிர்கொண்டுள்ளது. மிகச்சிறிய வைரஸ் உலகின் சுகாதாரத்தை சிக்கிலில் சிக்க வைத்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். உலகின் பொருளாதாரத்தை பாழாக்கிவிட்டது. உலகின் வல்லரசு நாடுகளே தத்தளித்து வருகின்றன.

அந்த நாடுகளில் மக்கள் நெரிசல் குறைவு. ஆனால் அங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நமது நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. இதற்கு பிரதமர் மோடியின் திறமையான தலைமையே முக்கிய காரணமாகும்.

மக்களின் உயிரை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படக்கூடாது. நாட்டின் ஒவ்வொரு துறையும் தற்சார்பு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உதவிக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் 35 லட்சம் நிறுவனங்கள் பயன் பெறும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். இதன் மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு ரூ.30 ஆயிரத்து 611 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

உரம் உற்பத்தியில் தன்னிறைவு அடைய பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளோம். ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்யும் ராமகுண்டம் உர தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் அந்த தொழிற்சாலை செயல்பட தொடங்கும். ஏற்கனவே உள்ள 4 உர தொழிற்சாலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைய திட்டங்களை தீட்டியுள்ளோம். ரூ.3,000 கோடியில் நாட்டின் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.

இந்த பேட்டியின்போது, எம்.பி.க்கள் பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News