செய்திகள்
கைது செய்யப்பட்ட நபர்கள்

உ.பி: 8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது

Published On 2020-07-07 22:21 GMT   |   Update On 2020-07-07 22:21 GMT
உத்தரபிரதேசத்தில் 8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடியை கைது செய்ய கடந்த 3 ஆம் தேதி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.

ஆனால் இதை முன்கூட்டியே அறிந்திருந்த துபேய் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசாரை சுட்டு வீழ்த்த திட்டம் தீட்டினான். 

போலீசார் தனது வீட்டின் அருகே வந்தபோது மாடிகளில் தயாராக இருந்த துபேய் தலைமையிலான ரவுடி கும்பல் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக துப்ப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் 8 போலீசார் கொல்லப்பட்டனர். போலீசாரில் பலர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்த உத்தரபிரதேச போலிசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதல்கட்டமாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய துபேயின் நெருங்கிய கூட்டாளிகளில் மேலும் 2 பேரை உத்தரபிரதேச போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

அரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு நபர்களிடம் துபேயின் மறைவிடம் தொடர்பாகவும், தாக்குதல் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Tags:    

Similar News