செய்திகள்
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா

ராணுவத்தை அவமதிப்பதை நிறுத்துங்கள்- மன்மோகன் சிங்கிற்கு பாஜக தலைவர் பதில்

Published On 2020-06-22 09:10 GMT   |   Update On 2020-06-22 09:10 GMT
இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதையும், அவர்களின் வீரம் குறித்து கேள்வி எழுப்புவதையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் என பாஜக தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் என்று கூறிய மன்மோகன் சிங்,  சீன விவகாரம் தொடர்பாக தவறான தகவல் தருவது சிறந்த தலைமைக்கு அழகல்ல என்றும் கூறினார். சீனாவின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் வார்த்தைகள் அமைந்துவிடக்கூடாது, பிரதமர் அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பதிலளித்து, அடுத்தடுத்த டுவிட்டர் பதிவுகள் மூலம் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

43,000 கி.மீ இந்திய நிலப்பரப்பை சீனர்களிடம் சரண்டர் செய்த கட்சியைச் சேர்ந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். யுபிஏ ஆட்சிக்காலத்தில், சண்டையே இல்லாமல் மோசமான வகையில் நமது பிராந்தியம் சரண்டர் ஆனதை பார்த்தோம். இப்போது மீண்டும் நம் படைகளை குறைத்து மதிப்பிடுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும், தயவுசெய்து நமது படைகளை மீண்டும் மீண்டும் அவமதிப்பதையும், வீரர்களின் வீரம் குறித்து கேள்வி எழுப்புவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து தேச ஒற்றுமையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News