செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே, தேவேகவுடா

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, தேவேகவுடாவுக்கு வாய்ப்பு

Published On 2020-06-04 03:37 GMT   |   Update On 2020-06-04 03:37 GMT
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தேவேகவுடாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா வலியுறுத்தினார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.எச்.முனியப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநிலங்களவையில் கர்நாடகத்தின் 4 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எங்கள் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே நிறுத்தப்பட்டால், அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்களா?. அவர் தலித் சமூகங்களின் தலைவர்.

மேலும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா நிறுத்தப்பட்டால், அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும். அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வரும் பெரிய தலைவர். நாட்டின் பிரதமராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அதனால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால் நன்றாக இருக்கும்.

மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவே இறுதியானது. கட்சி விரோதிகளுக்கு எக்காரணம் கொண்டும் டிக்கெட் வழங்கக்கூடாது. சித்தராமையாவோ அல்லது டி.கே.சிவக்குமாரோ வெவ்வேறு தலைவர்கள் கிடையாது. இருவரும் சேர்ந்தே முடிவு எடுக்க வேண்டும்.

கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு டிக்கெட் வழங்கினால், மக்கள் குறை கூறுவார்கள். மாநிலங்களவையில் கார்கே மற்றும் தேவேகவுடா இருந்தால் அது கர்நாடகத்திற்கு நல்லது. இதற்கு எங்கள் கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனாவை சரியான முறையில் நிர்வகிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

எதிர்க்கட்சியாக நாங்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளோம். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளதால் கொரோனா பாதிப்பு கர்நாடகத்தில் அதிகரித்துள்ளது. முகக்கவசம் அணிந்து கொண்டால் கொரோனா ஒழிந்துவிடுமா?.

இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.
Tags:    

Similar News