செய்திகள்
ராம்விலாஸ் பஸ்வான்

9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியம் கையிருப்பில் உள்ளது - மத்திய மந்திரி பஸ்வான் தகவல்

Published On 2020-04-13 01:52 GMT   |   Update On 2020-04-13 01:52 GMT
9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா காரணமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மந்திரி பஸ்வான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

பெருந்தொற்று வைரசான கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

நாடு முழுவதும் உணவு தானியங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும், வினியோகம் செய்வதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பணி சிறப்பாக நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன. கடந்த 10-ந்தேதி நிலவரப்படி அரசின் சேமிப்பு கிடங்குகளில் 299.45 லட்சம் டன் அரிசி, 235.33 லட்சம் டன் கோதுமை என மொத்தம் 534.78 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் உள்ளன.

இப்போது அறுவடை காலம் என்பதால், புதிதாக அரசின் தொகுப்புக்கு வரும் உணவு தானியங்களையும் சேர்த்து நம்மிடம் கையிருப்புக்கு வரும் உணவு தானியங்கள் 2 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது.

பொது வினியோக திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்கு 60 லட்சம் டன் உணவு தானியம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர பருப்பும் வழங்கப்படுகிறது. மாதம் 35 கிலோ உணவு தானியம் பெறும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அந்தியோதயா திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கட்டுப்பாடுகளை நீக்கி, பொது வினியோக திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.

ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் உணவுப் பொருட்கள் சப்ளையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதனால் எந்த இடையூறும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News