செய்திகள்
ரோஜா

சுய ஊரடங்கின்போது என் மகளுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்தேன்- ரோஜா

Published On 2020-03-23 06:21 GMT   |   Update On 2020-03-23 06:21 GMT
நடிகையாக, அரசியல்வாதியாக எப்போதும் ஓய்வின்றி இருந்த தான் சுய ஊரடங்கின்போது மகளுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்ததாக ரோஜா தெரிவித்துள்ளார்.
நகரி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டி பாராட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று மாலை 5 மணிக்கு தனது கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி, மகள் அன்ஷு மாலிகா, மாமியார் மற்றும் உறவினர்களுடன் கை தட்டினார்.

பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கை நான் நகரியில் உள்ள எனது வீட்டில் என் மகள், மாமியார் மற்றும் உறவினர்களுடன் கழித்தேன். நடிகையாக, அரசியல்வாதியாக எப்போதும் ஓய்வின்றி இருந்த எனக்கு என் மகளுக்கு பிடித்த மீன் வறுவல், கேரட் பொறியல், தக்காளி கறி என என் கையால் சமைத்து கொடுத்தேன்.

கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொண்டால் நாட்டையும் காப்பாற்றலாம். அதற்காக யுத்தம் செய்ய வேண்டியதில்லை. அரசு விதிக்கும் நிபந்தனைகள், மருத்துவர்கள் அளிக்கும் ஆலோசனைகளை பின்பற்றினாலே போதும்.

இவ்வளவு பீதியிலும் தைரியமாக பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள, மருத்துவ உறுப்பினர்கள், போலீஸ் துறை மற்றும் சுகாதாரத்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு கைதட்டி நன்றியை தெரிவித்தேன். அவர்களுக்கு நாமெல்லாம் நன்றி கடன் பட்டுள்ளோம்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்படுத்திய கிராம தலைமை செயலகங்கள் சிறப்பாக பணியாற்றின. 50 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர், இரண்டாயிரம் பேருக்கு ஒரு தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது.

இவர்கள் ஒரு ராணுவம் போல் செயல்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டுபிடித்து உடனடியாக மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 2.5 லட்சம் தன்னார்வலர்கள் உழைப்பின் காரணமாகவே மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் 40 ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு இந்த அமைப்பை கேலி செய்தார். ஆனால் இன்று அவர்கள் வாலன்டியர் அல்ல வாரியர்ஸ் என்னும் அளவிற்கு செயல்படுகின்றனர்.

நாமெல்லாம் வீட்டில் நிம்மதியாக இருக்கிறோம். நமக்காக வெளியில் கொரோனா பயமின்றி இரவு- பகல் உழைத்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News