செய்திகள்
பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி

டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Published On 2020-03-03 11:04 GMT   |   Update On 2020-03-03 11:04 GMT
டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டாவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலிறுத்தி வருகிறது. 

இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் நேற்று நாள்  முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்றும் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் கூடியபோது டெல்லி வன்முறை குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். 

அதற்கு மக்களவை சபாநாயகர் அனுமதியளிக்காததையடுத்து எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அடுத்தடுத்து இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

அதேபோல், மாநிலங்களவையிலும் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவையும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News