செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

இளம் வயதில் சாதனை- ஓயோ ஓட்டல் அதிபரை பாராட்டிய டிரம்ப்

Published On 2020-02-26 10:31 GMT   |   Update On 2020-02-26 10:31 GMT
டெல்லியில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளம் வயதில் சாதனை படைத்ததாக ஓயோ ஓட்டல் அதிபரை டிரம்ப் பாராட்டியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொழில் அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, டாடா நிறுவனத்தை சேர்ந்த சந்திரசேகரன், ஹரி பார்தியா, குமாரமங்கலம் பிர்லா, இம்போசிஸ் சேர்மன் சலில் பரீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொழில் அதிபர்கள் கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்து பேசினார். சந்திரசேகரன் பேசும்போது, அமெரிக்காவில் தொழில் முதலீடு செய்ய வசதியாக வரி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த டிரம்ப் வரி குறைப்பு செய்ய வேண்டுமா? விதி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்று திருப்பி கேட்டார்.

மேலும் கூறிய அவர், இங்கு வந்துள்ள பல தொழில் அதிபர்கள் பெரிய நிறுவனங்களை உலகம் முழுவதும் நடத்தி வருகிறீர்கள். வரி குறைப்பு மிக முக்கியமானது. அதை விட விதிமுறை மாற்றங்கள் முக்கியமானது என்று கூறினார்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கேட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, 8-ல் இருந்து 10 சதவீதமே இருக்கிறது. இது, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும்.

அதே நேரத்தில் நீங்கள் உங்கள் பணிகள் இதை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது என்று கூறினார்.

இவ்வாறு தொழில் அதிபர்கள் ஒவ்வொருவராக கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் அங்கு ஓயோ ஓட்டல் அதிபரான இளம் தொழில் அதிபர் ரிதேஸ் அகர்வால் அமர்ந்து இருந்தார்.

அப்போது டிரம்ப் ரிதேஸ் அகர்வாலை சுட்டிக்காட்டி இங்கே பேராற்றல் கொண்ட இளம் தொழில் அதிபர் அமர்ந்து இருக்கிறார் என கூறி விட்டு நீங்கள் எத்தனை ஓட்டல் நடத்துகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு ரிதேஸ் இந்தியாவில் 330 ஓட்டல்களும், உலக அளவில் 40 ஆயிரம் ஓட்டல்களும் நடத்துவதாக கூறினார்.

உடனே டிரம்ப் உங்கள் தொழிலைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்கள் நடத்தும் தொழில் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் தொழிலை திறம் பட நடத்துகிறீர்கள் என்று கூறினார்.

அதன் பிறகு பேசிய டிரம்ப், இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
Tags:    

Similar News