செய்திகள்
கைதான பள்ளி நிர்வாகிகள் மாகிஅருஜா, மெல்ஜின் டிக்குரிஸ்.

கேரளாவில் அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத்திய நிர்வாகிகள் 2 பேர் கைது

Published On 2020-02-25 05:31 GMT   |   Update On 2020-02-25 05:31 GMT
கேரள மாநிலம் கொச்சி அருகே அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத்திய நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள தோப்பம்பட்டியில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே மாணவ, மாணவிகளை சேர்த்துக்கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் அதை மீறி 10-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை சேர்த்து உள்ளது.

இதுதெரியாமல் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். இந்த நிலையில் நேற்று கேரளாவில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது.

இந்த பள்ளியில் படித்த 34 மாணவ, மாணவிகளும் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாரானார்கள். இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாமல் 10-ம் வகுப்பு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே அனுமதி பெற்று விட்டு 10-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தியது தெரியவந்ததால் அங்கு படித்த 34 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத கல்வி அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். மேலும் இதுபற்றி தங்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். மாணவ, மாணவிகளின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலையால் கதறி அழுதனர்.

கல்வி அதிகாரிகளிடம் தங்களது பிள்ளைகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் அரசின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பள்ளியின் அறக்கட்டளை தலைவர் மெல்ஜின் டிக்குரிஸ், பள்ளி மேலாளர் மாகிஅருஜா ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News