செய்திகள்
டிரம்ப் மனைவியுடன்

இந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்?

Published On 2020-02-20 02:29 GMT   |   Update On 2020-02-20 02:29 GMT
இத்தனை தடபுடல் ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது என்ற மில்லியன் டாலர் அல்ல பில்லியன் டாலர் கேள்வி தவிர்க்க முடியாததாக வந்து நிற்கிறது.
டிரம்பின் முதல் இந்திய பயணம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து இருக்கிறது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த பார்வையும் இந்தியா மீதுதான் விழுந்து இருக்கிறது.

இருக்காதா, பின்னே?

ஜின் பிங்.... டிரம்ப்...

உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் ஜின்பிங், இந்தியாவுக்கு வந்து சென்று 4 மாதங்கள் ஆவதற்குள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுக்கு வருகிறார் என்றால் சும்மாவா?

டிரம்ப் வருகைக்காக ஏற்பாடுகளில் ஆமதாபாத்தும், டெல்லியும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றன.

24-ந் தேதி ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் ஏர்போர்ஸ் 1 விமானம் தரை இறங்குகிறபோது, அங்கே பிரதமர் மோடி வந்து தயாராக காத்திருப்பார்; டிரம்ப், மெலனியா தம்பதியர் விமானத்தில் இருந்து வெளியே வருகிறபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக.

இதற்காக இப்போதே ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூணத்தொடங்கி விட்டிருக்கிறது.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், விமான நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப், மெலனியாவுடன் பிரதமர் மோடி பங்கேற்கிற பிரமாண்ட ரோடு ஷோவுக்கும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சாலையின் இரு புறமும் லட்சக்கணக்கான மக்கள் கூடிவந்து அளிக்கிற உற்சாக வரவேற்பு ஒரு புறம், மற்றொரு புறமோ ஆடல், பாடல் என இந்தியாவின் பன்முக கலாசாரத்தை அப்படியே கண் முன் வந்து காட்டுகிற கலை நிகழ்ச்சிகள்... என பட்டையைக் கிளப்ப போகின்றன.

வழியிலே உள்ள குடிசை பகுதிகளை மறைப்பதற்கு 600 மீட்டர் தொலைவுக்கு 6, 7 அடி உயரத்துக்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டப்படுவது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தாலும், அரசு தரப்பில் யாரும் அதை கண்டுகொள்ளவே இல்லை என்பது வேறு விஷயம்.

அன்று மாலையில் ஆமதாபாத் மோட்டோரா பகுதியில் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டு வருகிற சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ (‘வணக்கம் டிரம்ப்’) என்ற பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளக் கூடிய இந்த நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் பேசுகிறார்கள். மறு நாள் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு ராணுவ அணிவகுப்புடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு, அதைத் தொடர்ந்து ஐதராபாத் பவனில் மோடி, டிரம்ப் சந்திப்பு, பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் வர்த்தகம், ராணுவம், இருதரப்பு உறவுகள் பற்றி விரிவாக பேசப்படுகிறது. ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம்.

இருப்பினும், இத்தனை தடபுடல் ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது என்ற மில்லியன் டாலர் அல்ல பில்லியன் டாலர் கேள்வி தவிர்க்க முடியாததாக வந்து நிற்கிறது.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நட்புறவு, ஜொலிக்கிறது. ராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவுதான் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

மோடி எனது நண்பர் என்று டிரம்ப் நெஞ்சார தழுவினாலும், நட்பு பாராட்டினாலும், இந்தியா என்றால் வரி விதிப்பு மன்னன், அதுவும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவில் அமெரிக்க பொருட்களை சந்தையிட உரிய வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை என்பது டிரம்பின் நெடுநாளைய குற்றச்சாட்டு.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது; அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதில்லை என்று புலம்பி வந்த டிரம்ப், ஒரு கட்டத்தில், இந்தியாவுக்கு அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அங்கீகாரத்தை கடந்த ஆண்டு ரத்து செய்து விட்டார்.

இதனால் ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்கிற வாய்ப்பை இந்தியா பறி கொடுத்திருக்கிறது.

மீண்டும் இந்த வாய்ப்பை பெறுகிற விதத்தில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடன் டிரம்ப் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த தருணத்தில் வாஷிங்டன் நகருக்கு வெளியே அமைந்துள்ள ராணுவ கூட்டு தளத்தில் டிரம்ப் நிருபர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியாவுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் சொன்ன பதில், “இந்தியாவுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளப்போகிறோம். ஆனால் அந்த பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை பின்னர் செய்து கொள்வதற்காக இப்போது பத்திரமாக வைத்திருப்பேன். அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுமா என்பது எனக்கு தெரியவில்லை” என்பதுதான்.



அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பதவியைத் தக்க வைத்துக்கொள்கிறபோது இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்று டிரம்ப் சூசகமாக உரைத்ததாகவே சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவுடனான வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வர்த்தக மந்திரி பியூஸ் கோயலுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், டிரம்புடன் இந்தியா வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது.

அடுத்து டிரம்ப் சொன்னதுதான் கொஞ்சம் கசக்கிறது.

“நாம் இந்தியாவால் வர்த்தக ரீதியாக நன்றாக நடத்தப்படவில்லை” என்பது டிரம்ப் சொன்ன வார்த்தைகள்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை 2018-19 ஆண்டில் 16.9 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 300 கோடி) இருந்தது என்பதில் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.

அதே நேரத்தில் 2019-ல் முதல் 3 காலாண்டுகளில் இரு நாடுகள் இடையேயான மொத்த சரக்கு, சேவை வர்த்தகம் வளர்ச்சி கண்டு 110.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சத்து 76 ஆயிரத்து 300 கோடி) என்ற அளவை எட்டி இருக்கிறது.

இந்தியாவுக்கு அமெரிக்கா இந்த கால கட்டத்தில் ஏற்றுமதி செய்த சரக்கு, சேவைகளின் மதிப்பு 45.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 100 கோடி) ஆகும். 2018 உடன் ஒப்பிடுகிறபோது இது 4 சதவீத வளர்ச்சி.

அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ள சரக்கு, சேவைகளின் மதிப்பு 65.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 59 ஆயிரத்து 200 கோடி) ஆகும்.

இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான ஒட்டுமொத்த வர்த்தகம் 238 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16 லட்சத்து 66 ஆயிரம் கோடி) அளவுக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படி இரு தரப்பு வர்த்தகம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவது (அதாவது இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது) அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்த வர்த்தக பற்றாக்குறையை சரிக்கட்ட வேண்டும் என்றால் இந்தியாவுக்கு இன்னும் கூடுதல் பொருட்களை குறிப்பாக பண்ணைப் பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. தகவல் தொழில்நுட்ப பொருட்களுக்கு வரி குறைப்பையும் இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

இப்படி எதிர்பார்ப்புகள், உரசல்கள் இருந்தாலும் டிரம்புக்கும், மோடிக்கும் இடையேயான நட்புறவு நன்றாகத்தான் இருக்கிறது. அதை டிரம்ப் புகழத்தவறவில்லை.

“எனக்கு மோடியை ரொம்பவும் பிடிக்கும். விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் போகிறவரையில் நாம் 70 லட்சம் மக்களை பார்க்கலாம் என்று பிரதமர் மோடி என்னிடம் கூறி இருக்கிறார். கட்டுமானப்பணிகள் நடந்து வருகிற அந்த மைதானம், உலகிலேயே பெரியதாக அமையும். எனவே இதெல்லாம் மிகுந்த உற்சாகத்தை தரும். நீங்கள் நன்றாக அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்” என்று நிருபர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கிறார்.

அது சரி, அவரது இந்திய பயணம் நமக்கு உற்சாகத்தை தருமா? 
Tags:    

Similar News