செய்திகள்
கெஜ்ரிவால்

டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

Published On 2020-02-12 05:28 GMT   |   Update On 2020-02-12 09:46 GMT
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 16ம் தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

கட்சி தொடங்கி 8 ஆண்டுகளே ஆகும் நிலையில் டெல்லியில் அந்த கட்சி நிகழ்த்தி வரும் சாகசங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.



வருமான வரித்துறையில் பணிபுரிந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்த அரவிந்த் கெஜ்ரிவால் சாமானிய மக்களை மேம்படுத்தும் திட்டத்துடன் ஆம்ஆத்மி கட்சியை தொடங்கி டெல்லி தேர்தலில் களம் இறங்கினார். 2013, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் டெல்லி மக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

தற்போதும் அவருக்கு 3-வது முறையாக டெல்லி மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை அவரது கட்சி கைப்பற்றி மீண்டும் சாதனை படைத்துள்ளது. 54 சதவீத மக்கள் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை தெரிவித்து இருப்பது இந்த தேர்தல் மூலம் உறுதியாகி இருக்கிறது.

ஆம்ஆத்மி கட்சி சார்பில் தேர்வான 62 எம்.எல்.ஏ.க்கள் இன்று கெஜ்ரிவால் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி சட்டசபை தலைவராக கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

அவர் முதல்வராக ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போடுகிறார்கள். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அந்த கடிதத்துடன் டெல்லி கவர்னரை சந்தித்து பேசுவார். ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். ஆனால் கெஜ்ரிவாலுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால் அவரை உடனடியாக ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் கேட்டுக்கொள்வார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைவதற்கான நடைமுறைகள் தொடங்கும். கெஜ்ரிவாலுடன் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பு விழாவை நடத்தலாமா? என்று முதலில் விவாதிக்கப்பட்டது.

அப்போது 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்பு விழா நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த முறை மந்திரிகளாக இருந்த அனைவரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் அமைச்சராக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை மிக எளிமையாக நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் மக்கள் முன்னிலையில் பதவி ஏற்க விரும்புவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இதையடுத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ராம்லீலா மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கின. டெல்லி முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப குடிதண்ணீர், கழிவறை வசதிகள் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.


கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் ஆம்ஆத்மி சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது. எனவே கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News