செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொதுநல வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2020-02-03 21:02 GMT   |   Update On 2020-02-03 21:02 GMT
ஆழ்துளை கிணறுகள் தொடர்பான பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த ஆண்டு சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

இதைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்காதது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

2010-ம் ஆண்டு பயனற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அந்த உத்தரவை மீறும் வகையில் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல மரண சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் சுஜித் வில்சன் அவருடைய தந்தை உருவாக்கிய ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். தமிழக அரசின் தவறான நடவடிக்கையால் அனுபவம் இல்லாத நபர்களை கொண்டு சிறுவனை மீட்க அனுமதித்த காரணத்தால் சுஜித் 20 அடியில் இருந்து 85 அடி ஆழத்துக்கு தள்ளப்பட்டான்.

இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்தியாவில் இனிமேல் சுப்ரீம் கோர்ட்டு நெறிமுறையை அமல்படுத்தி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.‌ஷா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் இந்த மனுவின் மீது 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான விபத்து மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News