செய்திகள்
ஆசிரியை ரூபஸ்ரீ - ஆசிரியர் வெங்கட்ரமணா - நிரஞ்சன்குமார்

ஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது

Published On 2020-01-25 10:17 GMT   |   Update On 2020-01-25 10:17 GMT
கேரள மாநிலத்தில் ஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 42). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரூபஸ்ரீ, தினந்தோறும் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதேபோல் கடந்த 16-ந் தேதி பள்ளிக்கூடம் சென்ற ரூபஸ்ரீ, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சந்திரசேகரன் மற்றும் உறவினர்கள் ரூபஸ்ரீ தேடி அலைந்தனர். ரூபஸ்ரீ மாயமானது பற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் 18-ந் தேதி அங்குள்ள கடற்கரையில் ரூபஸ்ரீ நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலைமுடி அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ரூபஸ்ரீயின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதன் மூலம் விசாரணையை தொடங்கினர். இதில் ரூபஸ்ரீ பணியாற்றிய பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் வெங்கட்ரமணா காரம்பர் (42) என்பவர் அடிக்கடி அவருடன் பேசியிருப்பது தெரியவந்தது. வெங்கட்ரமணாவை பிடித்து விசாரித்ததில் அவர் தான் ரூபஸ்ரீயை கொன்ற விவரம் தெரியவந்தது.

ரூபஸ்ரீயும், வெங்கட் ரமணாவும் ஒரே பள்ளியில் பணியாற்றியதால் அவர்களுக்குள் பழக்கம் இருந்தது. மேலும் அவர்களது வீடும் அருகருகே இருந்துள்ளது. இதனால் அவர்கள் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறும் இருந்துள்ளது.

சம்பவத்தன்று மாலை ரூபஸ்ரீ, வெங்கட்ரமணா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த வெங்கட்ரமணா, ரூபஸ்ரீயை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அவரது தலையை மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் உடலை கடலில் கொண்டு போய் வீச தனது கார் டிரைவரான நிரஞ்சன்குமார் (23) நாடியுள்ளார். அவரது உதவியுடன் ரூபஸ்ரீயின் உடலை காரில் ஏற்றியுள்ளனர். அங்கிருந்து கடற்கரைக்கு கொண்டு சென்று வீசி விட்டு எதுவும் நடக்காதது போல் நாடகமாடியுள்ளனர். ஆனால் போலீசார் வெங்கட்ரமணாவையும், கார் டிரைவரான நிரஞ்சன்குமாரையும் பொறி வைத்து பிடித்து விட்டனர். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வெங்கட்ரமணாவிடம் போலீசார் விசாரித்தபோது அவரது காரையும் சோதனை செய்துள்ளனர். கார் டிக்கியில் கிடந்த தலைமுடிகளை கைப்பற்றி ஆசிரியையின் தலைமுடியுடன் ஒப்பிட்டு சோதனை செய்தனர். இதில் கார் டிக்கியில் கைப்பற்றப்பட்டது ஆசிரியையின் தலைமுடி என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்தே ஆசிரியர் வெங்கட்ரமணா சிக்கினார்.

வெங்கட்ரமணா தனது வாக்குமூலத்தில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ரூபஸ்ரீயை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அப்படியென்றால் ரூபஸ்ரீயின் தலைமுடி அறுக்கப்பட்டது ஏன்? அவர் ஆடைகளின்றி நிர்வாண நிலைக்கு சென்றது எப்படி? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ரூபஸ்ரீ கற்பழித்தோ அல்லது பலாத்கார முயற்சியிலோ கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாக வெங்கட்ரமணாவிடமும், நிரஞ்சன்குமாரிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இதுதவிர ஆசிரியையின் உடலை காரில் கடத்திச் செல்லும்போது அந்த காரில் வெங்கட்ரமணாவுடன் அவரது மனைவியும் இருந்ததாக கூறப்படுகிறது. யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காகவே வெங்கட்ரமணா, அவரது மனைவியையும் காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.





Tags:    

Similar News