செய்திகள்
சந்திர கிரகணம்

2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் துவங்கியது

Published On 2020-01-10 18:21 GMT   |   Update On 2020-01-10 18:21 GMT
2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் துவங்கியது. சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்கலாம்.
புதுடெல்லி:

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 4 முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் கிரகணம் இன்று  இரவு 10.37 மணி முதல் தொடங்கி நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.

முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே, குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் (பெனும்ப்ரா) மட்டுமே சந்திரனில் விழுவதால், இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டு உள்ளது. இன்றைய சந்திர கிரகணம் ஆண்டின் முதல் முழு நிலவு (ஓநாய் நிலவு) நாளில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News