செய்திகள்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் பிபின் ராவத்

Published On 2020-01-01 06:38 GMT   |   Update On 2020-01-01 10:25 GMT
முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று பொறுப்பேற்றார். அப்போது, மூன்று பாதுகாப்பு படைகளும் ஒரு அணியாக செயல்படும் என தெரிவித்தார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது, முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ராணுவ தளபதி பிபின் ராவத்தை, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது. ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து பிபின் ராவத் நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, இன்று முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.

பதவியேற்றதும் பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘முப்படைகளின் தலைமை தளபதி பணி கடினமான பணியாகும். முப்படைகளும் ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்படும். அணியாக, இலக்கை நோக்கி செயல்படுவோம்’ என தெரிவித்தார். 



‘வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் கூட்டுப் பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் அரசியலில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி நாம் செயல்பட வேண்டும்’ என்றும் பிபின் ராவத் கூறினார்.

முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிபின்  ராவத், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
Tags:    

Similar News