செய்திகள்
ஜூம்மா மசூதியில் இன்று தொழுகை நடைபெற்றது

135 நாட்களுக்கு பிறகு ஸ்ரீநகரில் உள்ள ஜூம்மா மசூதி இன்று திறப்பு - தொழுகை நடத்த அனுமதி

Published On 2019-12-18 16:40 GMT   |   Update On 2019-12-18 16:40 GMT
ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அசம்பவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் துண்டிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு மசூதியின் வாயில்கள் மூடப்பட்டன.

மேலும், பிரிவினைவாத தலைவர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க மசூதியை சுற்றியுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.



இதற்கிடையில், காஷ்மீரில் தற்போது நிலைமை நிலைமை சீரடைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது மூடப்பட்ட ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. 

பின்னர் மசூதியில் இன்று மதிய நேர தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஜூம்மா மசூதியில் 135 நாட்களுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News