செய்திகள்
போலீசார் துப்பாக்கிச் சூடு

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்: அசாம் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

Published On 2019-12-15 10:39 GMT   |   Update On 2019-12-15 10:39 GMT
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை இன்று 4 ஆக அதிகரித்தது.
கவுகாத்தி:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.

வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 
இதற்கிடையே, அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் அமைப்புகள் முன்நின்று போராட்டத்தை நடத்துகின்றன. இதனால் போராட்டம் வலுத்தபடி உள்ளது.



போலீசார் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை, தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பஸ் நிறுத்தங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அசாம் தலைநகர் கவுகாத்தி மட்டுமின்றி லகீம்பூர், தேமாஜி, தின்சுகியா, திப்ரூகர், சடியோ, சிவசாகர், ஜோர்கட், கோலாகாட், கம்ரூப், பெங்கைகான் ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று காலை முதல் போராட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனால் அசாமில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கவுகாத்தியில் மாணவர்கள் தலைமைச் செயலகம் உள்பட பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.

கவுகாத்தி நகரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிர் இழந்தனர். துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் இன்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
 
Tags:    

Similar News