நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தொழில் துறையில் உற்பத்திகள் குறைந்து வேலைவாய்ப்புகள் பறிபோய் இருப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த பேரணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது தவிர 1 லட்சம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு டெல்லியில் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் வருகை காரணமாக டெல்லி நகரம் குலுங்கியுள்ளது.
இந்த பேரணியில் பங்கேற்று பேசிய பிரியங்கா காந்தி, நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள். நாம் அமைதியாக இருந்து விட்டால் புரட்சிகரமான நமது அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்பட்டு நாட்டில் பிரிவினை தொடங்கி விடும் என குறிப்பிட்டார்.