செய்திகள்
மாணவிகளை தொந்தரவு செய்த நபரை தாக்கும் கான்ஸ்டபிள்

மாணவிகளை தொந்தரவு செய்த ஆசாமியை வெளுத்து வாங்கிய பெண் கான்ஸ்டபிள் -வைரல் வீடியோ

Published On 2019-12-11 03:37 GMT   |   Update On 2019-12-11 03:37 GMT
உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த நபரை பெண் கான்ஸ்டபிள் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினார்.
கான்பூர்:

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆன்டி ரோமியோ படை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் வரம்பு மீறுபவர்களை கையும் களவுமாக பிடித்து தண்டனை வாங்கி கொடுப்பதுதான் இந்த ஆன்டி-ரோமியோ படையின் வேலை. 

இந்நிலையில் கான்பூரின் பிதூர் பகுதியில் நேற்று பள்ளி சென்ற மாணவிகளை, சில நபர்கள் தொந்தரவு செய்ததாக ஆன்டி ரோமியோ படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு  ஆன்டி ரோமியோ படை விரைந்தது. 

அங்கு பள்ளி செல்லும் மாணவிகளை மோசமான வார்த்தைகளால் ஒரு நபர் கிண்டல் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அந்த நபரை, ஆன்டி ரோமியோ படையின் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மடக்கிப் பிடித்தார். அத்துடன், தனது ஷூவை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாணவிகளை தொந்தரவு செய்த நபருக்கு, பெண் கான்ஸ்டபிள் சரியான தண்டனை கொடுத்திருப்பதாக பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

அதன்பின்னர் பிதூர் காவல் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள், அந்த பெண் கான்ஸ்டபிள் மற்றும் ஆன்டிரோமியோ படையின் மற்ற உறுப்பினர்களை பாராட்டினர். 

இதேபோல் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது ஆன்டி ரோமியோ படையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கத் தவறும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News